பக்கம் எண் :

189


பிறர்மனைவியை நேசித்தால்...?

"துயர்மிகுந்த உங்கள்நிலை உணருகிறேன்

      என்றாலும் துயர கற்ற

இயலவிலை, அமைச்சரது இல்லரசி       

      ஆய்விட்டீர்! எனது உள்ளம்

அயலொருவர் மனைவியிடம் அன்புசெய்ய

      ஒப்புவது அநீதி!" என்று

இயம்புகின்ற யூசுபின் வாய்பொத்தி        

     எழில்சுலைகா இயம்ப லானாள்!

 

காதலன் வேறு கணவன் வேறா?

"வேண்டுவதைத் தருவதற்கு விரும்பவில்லை

      என்றா லும்வே றொருவர்

தீண்டுகின்ற மனைவியெனச் செப்பாதீர்,

      என் நெஞ்சைச் சிதைத்திடாதீர்.

மீண்டுமொரு முறையேனும் அமைச்சரது

      மனைவியென விளம்பு வீரேல்

மாண்டொழிதல் நிச்சயமே, சத்தியமே!"

      எனச்சுலைகா மனது நொந்தாள்.

 

  ஆசைக்காக ஆவி இழப்பதா?

"நெஞ்சிலெழும் இச்சையினை அடக்காமல்

      உயிர் துறக்க நினைத்தல் போன்ற

பஞ்சையர்கள் வேறில்லை; இளவரசி!"

      என யூசுப் பகரக் கேட்டுத்

"தஞ்சம் தர உங்களிடம் கெஞ்சுகிறேன்.

      எனக்குதவி தரம றுத்தால்

வஞ்சமுடன் உயிர்பறிக்கும் நஞ்சாவீர்!"

       எனச்சுலைகா வருந்திச் சொன்னாள்!