| உணவுக்காக உயிர்கொடுப்பதா? "நல்லுணவும் பிணியாளர் உயிர்க்கொல்லும் நஞ்சாதல் அறிவேன் ஆனால், புல்லுணவுக் காகவுயிர் போக்குதற்குத் துணிபவரைக் புவியில் காணேன்! நல்லுணர்வு பெற்றிடுவீர், மாதரசி!" எனயூசுப் நவிலக் கேட்டுச் "சொல்லுணவு படைக்கின்ற என்னுயிரே!" என்றழைத்துச் சுலைகா சொல்வாள்: இருவரின் எண்ணங்கள் : "என்னிதயச் சோலையினில் தாம்விதைத்த காதல்விதைக் கேற்ற வண்ணம் என்னுணர்வுக் குருதியினைத் தண்ணீராய்ப் பாய்ச்சிவளர்த் தின்ப முற்றேன்; உன்னுடைய காதல்விதை உயர்கனிகள் தருமரமாய் ஓங்கி, என்றன் மென்னுடலில் நரம்பாக வேரோடி விட்டபின்னே வெட்டப் போமோ?" யூசுப் : "வாய்மையெனும் மாளிகையின் மதிலுடைக்கப் பெருமரமே வளரக் கண்டால் தூய்மையெனும் கோடரியால் பிளந்தெறிவர், மாளிகையின் சொந்தக் காரர்! தாய்மையெனும் அரும்பதவி தாங்குகின்ற பெண்குலமே தவறு மாயின் மாய்ந்தொழியும் மனிதநெறி அதற்குதவும் ஆடவரும் மிருக மாவார்!" |