பக்கம் எண் :

191


சுலைகா :

"பெண்ணொருத்தி இளநெஞ்சைக் கனவினிலும்

      கெடுக்காத பெருமை பெற்றோர்

பொன்னுரைகள் அத்தனையும் புகலுகின்ற

      நாவரசே! புவன மெங்கும்

இன்னுரைகள் கூறுபவர் இருக்கின்றார்.

      தன் தவற்றை எண்ணிப் பார்ப்போர்

மன்னுயிரில் அரிதரிது. அவர்கள் மனம்

      பெற்றீரேல் மறையும் துன்பம்"

 

யூசுப் :

"தன்னிலையைப் பெரிதென்னும் அறிவிலிகள்

      பிறர்நிலையைச் சற்றும் காணார்;

இந்நிலையில் இருக்கின்ற காரணத்தால்

      என்மீது குறைசொல் கின்றீர்.

என்னிலையைச் சிறிதுணர்ந்தால் நும்தவறுக்

      கெனையழைக்க எண்ண மாட்டீர்.

நின்னிலையை யானறிவேன் என்றாலும்

      தவறிழைக்க நினைக்க மாட்டேன்!"

 

சுலைகா :

"தாயில்லாப் பிள்ளையெனச் சேயில்லார்

      செல்வமெனத் தகுதி யற்ற

வாயில்லா ஊமையென வாழ்வில்லாக்

      கன்னியென வருந்தி நொந்தேன்!

நீயில்லாச் சுவனமதைத் தந்தாலும்   

      ஏற்பதற்கு நினைக்கா என்னைத்

தீயுள்ளே தள்ளிவிட்டு வேடிக்கை     

      பார்த்திடவோ தீர்மா னித்தாய்?"