பக்கம் எண் :

192


யூசுப் :

"இன்பமதைத் துன்பமென, துன்பத்தை

      இன்பமென எண்ணு வார்க்கு

விண்ணகத்துச் சுவனமதைக் காட்டிடினும்

      அதைநரகாய் வெறுக்கக் கூடும்;

என்னென்ன சான்றளித்தும் ஏற்காது

      வாதிப்போர் எதையும் ஒப்பார்!

அன்னவருக் குபதேசம் செய்தவனின்

      பயனடைந்தேன் அறிவி ழந்தேன்!"

 

சுலைகா :

"விரும்பாத உபதேசம் சுவைக்காது

      வெறுப்பதற்கு உரிய தாகும்!

இரும்பான சிந்தையினில் இரக்கத்தை

      எதிர்நோக்கி இழிவ டைந்தேன்.

கரும்பான என்னிளமை கசப்பான

      வேம்பாக்கக் கனவில் வந்து

பெரும்பாவம் புரிந்தின்று மறுபாபம்

      செய்வதிலா பெருமை கண்டீர்?

 

பதைக்கின்ற என்னுள்ளப் புழுக்கத்தை

      அறியாமல் படித்த யாவும்

கதைக்கின்ற நாவரசே, நும்கருணை

      கிட்டுமெனக் காத்த என்னைச்

சிதைக்கின்ற கொடுந்துணிவு எவ்வாறு

      அடைந்திட்டீர் தீண்டி டாமல்

வதைக்கின்ற தம்முகத்தைத் தரைநோக்கிக்

      கவிழ்த்ததுஏன்? வாய்தி றப்பீர்!