பக்கம் எண் :

18


தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விடுகிறாள். அவள் சந்தித்தவனைக் கண்டுபிடித்து அவனிடம் சுலைகாவை ஒப்படைக்க சுயம்வரம் நடத்திப் பார்க்கின்றனர். இங்கேயும் தான் கனவிலே கண்ட ஆணழகனைக் காணாமல் ஏமாற்றமடைகிறாள் சுலைகா. அவளது உணர்வு கலங்குகிறது. இங்கே நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார் கவிஞர்.

இரவு பகல் எந்நேரமும் தன்னுடனிருக்கும் தோழிகளாலும், அரசு நடத்தும் அமைச்சர்களாலும், படைநடத்தும் வீரத்  தளபதிகளாலும்  தன்னைச்  சீராட்டி  வளர்த்த  அருமைத்  தந்தையினாலும்  தன்  கனவுக்காதலனைக் கொண்டுவந்து  தன்னுடன்  சேர்க்க  இயலாமையை எண்ணி எண்ணி ஏங்கிய சுலைகா, இறுதியாக இறைவனிடமே தன் துன்பத்தை முறையிடுகிறாள். இப்போது சுலைகா ஏமாறவில்லை; அந்த ஆணழகர் அவளைத் தேடி வருகிறார். வந்தவரை விடவில்லை சுலைகா. இறைவன் மீது ஆணையிட்டு, அவரது இருப்பிடம் பெயரை வினவுகிறாள்.

 

     "செங்கடலின் மத்தியிலோ, கருங்கடலின்      

         முனையினிலோ தீக்கொழுந்து           

    பொங்குகின்ற பாலையிலோ பனி உறையும்  

          பாறையிலோ புலியும் சிங்கம்             

    தங்குகின்ற காட்டினிலோ எங்கே நீர்       

  இருக்கின்றீர்? சாற்று வீரேல்  

    அங்குடனே வந்திடுவேன். அது நரகே       

   என்றாலும் அன்போ டேற்பேன்!"

 

என்கிறாள். செங்கடலின் பேரலைகள் முத்தமிட்டு மகிழுகின்ற மிசுரு நாட்டின் முதலமைச்சன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான் அந்த ஆணழகன். இத்தனையும் கனவில்தான். ஆனால் அவள் இந்தச் சந்திப்பை வெறும் கனவாக நினைக்கவில்லை. உண்மையான சந்திப்பாகக் கருதித் தன்னை மிசுரின் முதலமைச்சருக்குத் திருமணம் செய்விக்கும்படி தந்தைக்குச் செய்தியனுப்புகிறாள்.