| விந்தையென எண்ணாதீர் நும்மீது; சத்தியமாய் விளம்பு கின்றேன். வந்தனைகள் செய்கின்றேன். வாய்விட்டுக் கெஞ்சுகிறேன். வாரீர், வாரீர்!" யூசுப் : நெஞ்சுருக்கும் சுலைகாவின் வார்த்தைகளால் குனிந்ததலை நிமிர்த்தி யூசுப் "கெஞ்சுகின்ற உங்கள்மொழி மிஞ்சுகின்ற என்துயரைக் கிளறிற் றல்லால் கொஞ்சுகின்ற இச்சையினைத் தரவில்லை, உறுதியையும் குலைக்க வில்லை! அஞ்சுகின்ற எனைச்செல்ல அனுமதிப்பீர்" எனக்கூறி அப்பால் சென்றார்! சுலைகா : பயந்தகலும் யூசுபின் வலக்கரத்தை இளவரசி பாய்ந்து பற்றிப் புயந்தழுவத் துடிதுடித்தாள். ‘வெடுக்’கென்று கையிழுத்தார், புலியாய்ச் சீறி "நயந்தமுறை அத்தனையும் யானுரைத்தும் எனைச்சிறிதும் நாட வில்லை; இயன்றவழி இனியும்மைப் பலவந்தம் செய்வதுதான்" என்று சொன்னாள்! யூசுப் : "நீதிக்கும் அஞ்சாமல் நேர்மைக்கும் அஞ்சாமல் நினைத்த வாறு சாதிக்கத் துணிந்தக்கால் சாவுக்கும் துணிந்திடுவேன் தவற்றிற் கொப்பேன்! |