"என்னரும் உயிரே, அண்ணலே உங்கள் இதயமே இளகிட இறைவன் இன்னருள் புரிந்தான்; என்துயர் களைந்தான்" என்றிரு விழிகளைக் கவிழ்த்தாள்! சந்திரன் தனையே தொட்டதும் கதிரோன் தன்முகம் குளிர்வது* போன்று சுந்தரச் சுலைகா தன்னிரு பாதம் தொட்டதும் யூசுபும் குளிர்ந்தார்! சிந்தையில் பொங்கும் மகிழ்வினால் மீண்டும் சிரம்குனிந் திறையருள் புகழ்ந்தாள் அந்தவார்த் தையினால் தீமிதித் தவராய் அதிர்ச்சியாய் அகன்றனர் யூசுப்! இறைவனின் பெயரைக் கேட்டதும் யூசுப் இன்னுடல் நடுங்கிட, உணர்வால் கறைபடும் நினைவைக் களைந்திடத் தன்முன் கனவெனத் தந்தையர் யாக்கூப் குறைபடும் முகத்தால் பெருவிரல் கடித்துக் கொடுஞ்செயல் தடுப்பது போன்று விரைவினில் தோன்ற நோக்கிய யூசுப் மிரண்டவர் போலவே விழித்தார்! பெரும்பிழை புரிந்தோர் நீதியின் முன்னர் பீதியாய் நிற்பதைப் போன்று உருகிடும் யூசுப் செயலினை அறிந்து ஒன்றையும் உணர்ந்திடாச் சுலைகா "வருந்துதல் ஏனோ, வள்ளலே!" என்றாள். வாய்திறக் காமலே யூசுப் பெருக்கிடும் கண்ணீர் துடைப்பதைக் கண்டு பெருந்திகில் கொண்டனள் சுலைகா! * சூரிய கிரணத்தைக் குறிப்பிடுவது. |