அன்புடன் யூசுப் பக்கமே திரும்பி, "அடுத்தவர் அறிந்திடா வண்ணம் பண்புடன் இதையே மறைத்திடு!" என்று பயந்திடும் சுலைகாவைப் பார்த்தார்! "உன்னுடைப் பாவம் கொடியது சுலைகா உணர்ந்துநீ மன்னிப்புப் பெறுவாய் இந்நிலை பிறரே அறிந்திடில் எனக்கே இழி" வெனக் கூறிய அமைச்சர், உன்னத யூசுப் துயர்முகம் பார்த்து "ஒன்றையும் நினைத்திடேல்!" என்று தன்னிலை நினைக்க நெஞ்சமே வலிக்கத் தனிமையை நாடினா ரமைச்சர். அருங்குண அமைச்சர் அகன்றபின் சுலைகா அழகுறும் யூசுபை நெருங்கிப் "பெருங்குணம் படைத்த யூசுபே! என்றன் பெரும்பிழை பொறுத்திடல் வேண்டும்! அருகினில் அமைச்சர் வந்ததா லும்மேல் அநீதியைச் சுமத்தினேன்" என்றாள் உருகிடும் நெஞ்சால் பெருகிடும் கண்ணீர் உருண்டிட நகர்ந்தனர் யூசுப்! நடந்ததை எண்ணி வருந்திய சுலைகா நகர்ந்திடும் யூசுபை நோக்க, உடைந்தன கண்ணீர் முத்துக்கள், உள்ளம் ஊற்றென உணர்ச்சியைப் பெருக்க அடைந்திட அமைத்த ஆசையின் கோட்டை அமைச்சரின் வருகையால் வெடித்தே இடிந்ததை எண்ணி இயந்திரம் போன்றே ஈரிரு நாட்களைக் கழித்தாள்! - - x - - |