விருந்தின் பெருமை! பூமணக்கும் பொழிலினிடை முழுமதியின் நிலவு பொழிகின்ற நாளினிலே முன்னிரவு தன்னில் தேமணக்கும் பல்லுணவை நாவினிக்கச் செய்து சிறப்புடனே பாங்கியர்கள் பரப்பிவைக்கும் போதில் பாமணக்கும் இன்னிசையைப் பாடகியர் பாட பாதைநின்று வருபவரைப் பணிந்திருவர் அழைக்க மாமணப்பெண் போல்சுலைகா மகிழ்ச்சிமுகம் காட்டி மனமுவந்து விருந்தினரை உபசரிக்க லானாள். பாட்டியரும் பேர்த்தியரும், தாயும் பெண்ணு மாகப் பலவயது மாதர்களும் வந்திடவே, தம்மைக் கூட்டியதின் காரணத்தை எவரும்அறி யாமல் குறுகுறுக்கும் எண்ணமுடன் உணவுமுன் அமர்ந்து பாட்டினிமை செவிநுகரப் பரவசமே கொண்டார். பரப்பிவைக்கும் பல்லுணவை உண்ணும்ஆவ [லுற்றார். தீட்டியதோர் கத்தியொடுசெழுங்கனிஒவ் வொன்றைச் சேடியர்கள் அனைவருக்கும் தனித்தனியே வைத்தார்! புதுமணமே மிகும்கனியைப் புதுமையாக நோக்கிப் "புவியிலெங்குக் காய்த்தபழம் புகன்றிடுவீர்!" என்று பொதுவினிலோர் முதுகிழவி சேடியினைக் கேட்கப் "பொறுத்திருங்கள் விரைவினிலே அறியலாகு" [மென்றாள். இதுபொழுதே உடனெழுந்து எல்லோரையும் பார்த்து எழில்சுலைகா ஒருகனியைத் தன்கரத்தி லேந்தி "எதுவுமிதன் சுவைக்கிணையோ இந்தப்பழ மேதான் இந்துஸ்தானில் காய்த்த" தென்று இனிமையாகச் [சொன்னாள்! |