காதலா, கடுஞ்சிறையா இவர்பெயரே யூசுபென அறிந்ததும் ஒருத்தி "இவரெழிலே மயக்கிவிடும்!" என்றுஒப்ப லானாள்! "இவரிடமே காதலுற்று இரவுபக லாக ஏக்கத்தினால் அழுதழுது தூக்கமும் இழந்தேன். அவரிடமே வலியச் சென்று யானழைத்த துண்மை அமைச்சரங்கு வந்ததனால் தப்பியோடி விட்டார். இவரினிமே லென்விருப்பம் மறுத்துவிடில் சிறையில் இன்னலுறத் தள்ளிடுவேன்’எனச்சுலைகா சொன்னாள் இன்னமும் சுலைகாமனம் தன்னையே விரும்பி ஏங்குவதைக் கண்ட யூசுப் இறைவனையே நோக்கி "பெண்ணிவளின் கொடுஞ்சதியில் சிக்கிடாமல் காக்கும் பெருஞ்சிறையே நன்மையாகும்!" என்றிறைஞ்ச லானார். அண்மையினில் மறைந்திருந்த அமைச்சரஜீஸ் பாய்ந்து "அவ்விதமே சிறையில்வைப் பேன்!" என்றபடி வந்தார். "உண்மையினில் இருவருக்கும் இதுநலமே!" என்று உரைத்தனரே விருந்தினர்கள் உளமுடைந்தாள் சுலைகா. சிறையைக் காட்டிப் பயமுறுத்தினால் யூசுப் பணிந்துவிடலாம் என்று நினைத்தாள் சுலைகா. காம வலையில் சிக்குவதை விடச் சிறைக்குச் செல்வதையே யூசப் விரும்பினார். இருவர்தம் ஒழுக்கத்தையும் பாதுகாப்பதற்கு நிரபராதியான யூசுபைச் சிறைப்படுத்தினார் அமைச்சர். "யூசுபைப் பார்த்துக் கொண்டிருந்தாலாவது அமைதியாக இருக்குமே!" என எண்ணிப் பலநாட்கள் ஏங்கினாள் சுலைகா. ஒருநாள் நள்ளிரவில் தன் தோழியை அழைத்துக் கொண்டு யூசுபைக் காணுவதற்காகச் சிறைக்குச் செல்லத்துணிகிறாள் சுலைகா. |