பக்கம் எண் :

204


மூன்று உள்ளங்கள்

இயல்-40

காவலரும் ஏவலரும் கண்ணுறங்கும் போதில்        

      காதலரைக் காணுதற்குத் தோழியையும் கூட்டி

ஆவலுடன் எழிலரசி சிறைபுகுந்து ஆங்கு            

      அறையறையாய் யூசுபினைத் தேடிப்பார்க்க லானாள்.

யாவருமே தூங்குகையில் இறையருளை வேண்டி     

      யூசுபங்கே வணங்குவதை சுலைகாகண்டு கொண்டாள்

தேவர்களும் இவரழகுக் கடிமையாவர் என்று            

      சிந்தையிலே நினைத்தபடிச் செயலிழந்து நின்றாள்.

 

ஏதும்துயர் அற்றவராய் யூசுபுடன் வேறு            

      இருவரங்கு உறங்குவதைப் பார்த்ததும் சுலைகா

"யாதுகுற்றம் செய்ததனால் இங்கிவர்கள் வந்தார்?   

      என்பதனை அறிந்துவிடில் இன்றே அவர் போன்ற

தீதுசெய்து யானுமிங்கு வந்திடுவேன்!" என்று       

      சிந்தைநொந்து தோழியிடம் விந்தையாகச் சொன்னாள்.

"போதுமின்று பார்த்தது புறப்படுவீர்!" என்று         

      புரியும்படிச் சைகைகாட்டி அழைத்தனளே தோழி.

 

"கண்களினால் கண்டுவிடில் போதுமாடி தோழி     

      கதவருகில் அவரழைத்துக் கருணைசெய்யக் கேட்போம்!

பெண்களிலே என்னைப்போன்ற பெருந்துயரம் 

                                           கொண்டோர்

      பிறக்கவிலை என்பதவர் உணரும்படிச் செய்வோம்.

புண்களிலே துன்பப்புழு வளர்ந்துபுரை யோடிப்   

      பொன்னுடலைத் துளைத்திடுமுன் மருந்தளிக்கச்

                                          சொல்வோம்!"

கண்களிலே நீர்சுரக்கச் சுலைகாகூறும் போதில்    

      கைதிகள் இருவருமே துடித்துஎழக் கண்டாள்.