பக்கம் எண் :

206


விருந்தினர்கள் அனைவருந்தன் யூசுபினை நோக்கி

      வியப்படைந்து மனம்மயங்கி விட்டதையு ணர்ந்து

வருந்தினவ ளாய்ச்சுலைகா மீண்டும் மீண்டும் கூவி

      "மாம்பழமே புசித்திடுவீர்" என்றுகத்த லானாள்,

விருந்தினர்கள் தம்விழியை யூசுபிடம் வைத்து,

      விருப்பமின்றி மாம்பழத்தை நறுக்கிடமு னைந்து

கருக்குடைய கத்தியினால் கைவிரல் அறுத்துக்

      கனிரசமாய்த் தங்குருதி உறிஞ்சிடலா னாரே!

   

விரைவுடனே பெண்கள் சிலர் யூசுபை நெருங்கி  

      மேலுங்கீழு மாக நோக்கிக் கண்களையே விரித்து

இறைவனாணை உரைத்திடுவோம், இவர்மனித ரல்லர்

      எழிலினிலே இவரைப்போன்று எவரும் கண்டதுண்டோ?

குறையறியா வானவரே, சிறிதும் ஐயமில்லை

      கூறிடுவோம் சத்தியமாய்!" என்றுசொல்ல லானார்,

"நிறை அழகே பெற்றஇவர் பார்வையினில் நீங்கள்

      நிலைகுலைந்து மயங்குவதோ எனச்சுலைகா கேட்டாள்!

 

 

கண்கவரும் அழகினிலே கருத்துடைய பெண்கள்   

      கட்டழகன் இவரழகில் மயங்குவது வியப்பா?

என்றொருத்தி கேட்டிடவே, யாவரையும் நோக்கி   

      "இவரின்பெயர் யூசுபென்று அறிந்திடுவீராயின்

முன்பொருத்தி இவரெழிலில் மயங்கியதற் காக    

      மோகவெறி கொண்டவளாய் இகழ்ந்தபிழை காண்பீர்

பெண்ணொருத்தி செயலினுக்குப் பிழைகள்கற்பித் தோரே

      பெரும்பிழையைச் செய்வதுவோ?" எனச்சுலைகா கேட்டாள்.