பக்கம் எண் :

207


விழித்தவர்கள் பார்த்திடுவார் என்றஅச்சத் தாலே        

விரைவினிலே தோழியுடன் தூண்மறைவில் சென்றாள்.

விழித்தவர்கள் கிலிபிடித்து யூசுபினை நோக்கி             

"விந்தையான கனவுகண்டோம் எனமுகம் வியர்க்க     

மொழிந்தபடி யூசுபிடம் விளக்கம்கேட்க லானார்     

மௌனமுற்ற யூசுபிடம் மீண்டொருவன் "திராட்சை       

பிழிந்துரசம் எடுத்திடவே கனவுகண்டேன்" என்றான்.

பின்னொருவன் பெருந்திகிலால் இதழ்நடுங்கிச்சொல்வான்:       

 

"என்தலையில் ரொட்டிச்சுமை எடுத்தேகும் போதில்

எங்கிருந்தோ பலபறவை பறந்தென்மேற் பாய்ந்தே         

என்தலையின் ‘ரொட்டி’களைக் கொத்திக்கொத்தியுண்டே

ஏகிடவே கனவுகண்டேன்!" என்றவ னுரைக்க       

"உன்கனவு பெருந்துன்பம்; அவன்கனவோ இன்பம்   

உண்மையினைச் சொல்வதெனில் உள்ளம்துடிப்பாயே!"

என்றபடி முந்தியவன் தனையூசுப் நோக்கி         

"இறையவனுன் சிறைக்கதவு திறந்தானனே!" என்றார்.

 

"என்னுடைய கனவின்பயன் யாதெனினும் நீங்கள்   

இயம்பிடுவீர், எத்துயரும் ஏற்றிடுவேன்!" என்று     

இன்னொருவன் கேட்டவுடன் மனம்வருந்தி யூசுப்     

"இன்றுதயம் நீதூக்கில் தொங்கிடவே நேரும்.      

உன்னுடலைப் பிணக்கழுகும் பருந்தும்கொத்தியுண்ணும்.  

உண்மையிது நிச்சயமாய் நடந்துவிடும்!" என்று     

சொன்னவுடன் அன்னவனே மயங்கித்தரை வீழ்ந்தான்.

துயர்மறந்து முந்தியவன் யூசுபைப் புகழ்ந்தான்!