[நிரபராதியான யூசுபைத் தொடர்ந்து சிறையில் வைக்கும்படி நேர்ந்ததைக் குறித்து அமைச்சரஜீஸ் வருந்தினார். கைக்குக்கிட்டிய காதலர் தன் கண்ணியில் சிக்கவில்லையே என்று சுலைகா ஏங்கினாள். தான் களங்கமற்றவர் என்பதை உலகிற்கு நிரூபித்தாக வேண்டுமே என்று கலங்கினார் யூசுப். இதனிடையே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒருநாள் எகிப்தின் அரசர்-ராயன்-பின்வலீத் ஒரு கனவு கண்டார். அவர் தாம் கண்ட கனவைச் சபையில் அறிவிக்கின்றார்.] திரை விலகியது இயல்-41 "கருத்தினில் தெளிந்து கலைபல நெஞ்சில் நிறுத்தும் திறமை நிறைந்த சபையீர் ! கருத்துடன் கேளீர், கண்டேன் கனவு பருத்துக் கொழுத்த பசுக்கள் ஏழை. இளைத்து மெலிந்த ஏழு பசுக்கள் வளைத்துப் புசித்துக்களித்திடக் கண்டேன். தழைத்துச் செழித்த தானியக் கதிரும் மலையிலாப் பயிரின் வாடிய கதிரும் தனித்தனி ஏழு தங்கிடக் கண்டேன். கணித்திட இயலேன் கனவின் கருத்தை உங்களில் எவரும் உரைத்திட முடிந்தால் இங்குடன் சொல்வீர்" என்றார் வேந்தர் ! "எண்ணச் சிதைவால் எழுந்ததே யன்றி உண்மையில் எதையும் உணர்த்துவ தல்ல !" என்றார் சபையில் இருந்தவர் சிலரே ! "நன்றாய் ஆய்வீர், நல்லுரை சொல்வீர் !" |