என்றார் மன்னர் இவ்வுரை கேட்டு "ஒன்றே சொல்வேன் உணர்வுப் பிழையால் தோன்றலாம் கனவு தோன்றலே" என்று சான்றவர் போன்று சாற்றினார் ஒருவர். அமைச்ச ரஜீஸு அரசரை நோக்கி "எமக்கிது கூற இயன்றிடா தென்றார். அனைத்தும் கேட்டு அப்பால் நின்றவன் நினைவில் யூசுப் நிழலுருத் தோன்றத் தன்னுடைக் கனவின் தகுபொரு ளுரைத்த நன்னய யூசுப் நவின்றிடக் கூடும். அவரினை யன்றி அரசரின் கனவை எவரெடுத் துரைப்பார் என்றவோ ரெண்ணம் வளர்ந்திட மன்னரை வணங்கிச் சொல்வான்: "தளர்ந்திட வேண்டாம் சற்றே என்னைச் சிறைக்கு அனுப்பிடில் தெளிவுடன் கனவை உரைத்திட முடியும் ஒப்புக" என்றான். "எப்படிச் சிறையில் இதையறிந் திடுவாய்? ஒப்பிடச் சொல்வாய் உடனே!" என்றார். "சிறையினில் முன்னர் திராட்சை பிழியும் முறையினில் கனவு ஒருமுறை கண்டேன். விரைவினில் அதனால் விடுதலை என்று சிறையினில் ஒருவர் தெளிவுடன் உரைத்தார். அவரிடம் சென்றால் அரசரின் கனவை எவரும் வியந்திட இயம்புவார்!" என்றான். "உடனே செல்வாய் ! உணர்ந்து மீளல் கடனாய்க் கொண்டு கடிதில் வருவாய் !" என்றார் மன்னர், இன்முகம் காட்டிச் சென்றான் விரைந்து சிறையை நோக்கி. |