பக்கம் எண் :

211


"அவனது குற்றம் அறைவீர்" என்றார்.       

"இவனென் அடிமை" என்றார் அமைச்சர்.    

"அடிமையே என்றால் அவனையே சிறையில்

கொடுமையாய்த் தள்ளல் கூடுமோ?" என்றார்.

"தன்னையே சிறையில் தள்ளிடு மாறு         

என்னையே கேட்டான்!" என்றார் அமைச்சர்.

"விருந்தினில் கைவிரல் அறுத்ததின் காரணம்

அறிந்திட அமைச்சரை - அவரது மனைவியை,

விருந்தினில் கலந்த பெண்களை வினவிடில்  

ஒருபிழை புரியா உண்மையை உணரலாம்    

என்றார் யூசுப்!" என்றான் பணியாள்;        

"இன்றே கேட்போம்!" என்றார் மன்னர்.      

 

பெண்களை அழைத்து உண்மையைக் கேட்டார்.

"கண்களை அளித்துக் காத்திடும் இறைவன்      

அனைத்தும் அறிவான், அவரிடம் தவறே       

தினையள வாயினும் தெரிந்தோ மில்லை!"    

என்றனர் பெண்கள். இவ்வுரை கேட்டு           

நின்றிடும் சுலைகா நெடுமூச் செறிந்தாள்!        

மன்னவர் சுலைகா மதிமுகம் நோக்கி           

"என்னிடம் மெய்யே இயம்புவீர்" என்றார்.     

 

இனியும் உண்மையை இருளிலும் மறைக்க       

நினைக்கவும் முடியா நிலையினை உணர்ந்தாள்.

"அவரை விரும்பி அழைத்தவள் யானே        

அவரிடம் பிழையென அணுவும் காணேன்"     

என்றாள் சுலைகா, எழுந்தார் மன்னர்           

"சென்றே யூசுபைச் சீக்கிரம் அழைத்து         

இங்கே வருவீர்!" என்றார் அமைச்சரை.        

அங்கே இருந்தவர் அனைவரும் சுலைகா       

தலைகவிழ்த் திருக்கும் தைமூஸ் புதல்வி       

நிலைகுலைந் ததையே நினைத்து வருந்தினர்!