மறைத்தவை யாவும் மன்னர் வரைக்கும் அறிந்திட நேர்ந்ததை அமைச்சர் நினைக்க நெஞ்சம் துடித்தது நினைவு சுழன்றது! வெஞ்சிறை யடுத்து விரைவில் யூசுபை விடுதலை செய்து மீட்டார் சபைக்கு. கெடுமதி கொண்டோர் கீழ்நிலை அடையும் உண்மையைச் சபையோர் உணர்ந்திட லானார். அண்மையில் நெருங்கி அரசரை நோக்கி: "என்திரை விலக்கிய ஏந்தலே பெண்கள் கண்சிறைக் கஞ்சிக் கடுஞ்சிறை புகுந்தேன்! கொற்றவ ராயினும், கற்றவ ராயினும் பற்றிடும் சூழ்ச்சியைப் பலித்திட இறைவன் விடுதே இலையென விளக்கிடு வதற்கே நடந்தவை அறிந்திட நவின்றேன்! அன்றியும் எனைவிலைக் கேற்ற எஜமா னருக்கே கனவிலும் துரோகம் கருதிலேன் என்பதை வெளிப்படை யாக்க விரும்பினேன்!" என்று தெளிவுடன் யூசுப் செப்பிட லானார். இருந்தவ ரெல்லாம் யூசுபின் எழிலை அருந்தினர்; அவரின் அமிழ்தெனும் பேச்சில் பொருந்திடும் உண்மைப் பொலிவைக் கண்டனர்! வருந்திடும் சுலைகா பெரும்பிழை ஆய்ந்து கனைத்தவ ராகக் கடுமையாய் அரசர் "அனைத்தையும் நீயே ஆக்கினை!" என்று மொழிந்தவர் சுலைகா முகத்தைப் பார்த்தார். வழிந்திடும் கண்ணீர் மறைத்திட லானாள்! "எல்லாம் சுலைகா இழிசெயல் என்ற சொல்லால் வீணே துன்புறுத் தாதீர்! எல்லாம் இயக்கும் இறைவனின் எண்ணம் அல்லால் எதுவும் அசைவதே இல்லை ! |