சிந்தை சுவைக்கத் திராட்சை பிழிந்து தந்திடும் பணியாள் சாற்றிய தெண்ணி மந்திரி முதலாய் மன்னரும், அரச தந்திரி பலரும் தவித்து நோக்கினர். மற்றவை ஆயும் மனவள மின்றி முற்றிலும் அவன்விடை பெற்றிடத் துடித்தனர்! ஒருசிறு நேரம் உருண்டபின் அவனே பெருந்திகி லுடனே திரும்பிடக் கண்டார். வந்தவன் தயங்கி வாயடைத் திருக்க, மந்திரி, "கனவின் மர்மம் யாதென அறிந்தனை யாநீ அவனெது உரைத்தான் தெரிந்ததைச் சொல்வாய் சீக்கிரம்!" என்றார். "அறிந்தது உண்மை யாயினும் அதனைப் புரிந்திட உரைத்தால் பெருந்துய ராகும்" என்றவ னுரைக்க, "எமக்கது தெரியும்! நன்றவ னுரைத்ததை நவின்றிடு!"என்று மன்னவர் கேட்க மற்றவர் மலைக்க நின்றவன் தயங்கி நிகழ்த்திட லானான்: "ஏழு ஆண்டுகள் இணைந்தாற் போன்று பாழும் பஞ்சம் படர்ந்திட லாமாம், சூழும் இதனால் துயர்ப்படு முன்னர் வாழும் வழியை வகுத்திட இறைவன் ஆண்டுகள் ஏழின் முன்னரே அதனைத் தூண்டினன் கனவில், தொடர்ந்திடும் பஞ்சம் நீக்கிடக் களஞ்சியம் நிறையத் தானியம் தேக்கிடல் வேண்டுமாம், சிறிதே அயர்ந்தால் பஞ்சமும் பிணியும், பட்டினிச் சாவும் மிஞ்சிடும் என்றே விளக்கினார்!" என்றான். |