பக்கம் எண் :

214


குடிகளின் வளத்தைக் குலைத்திடும் வண்ணம்

பிடித்திடும் பஞ்சப் பெயரைக் கேட்டதும்     

தோன்றலர் உள்ளம் துயரால் துடிக்கச்        

சான்றநல் லமைச்சர், தளபதி மற்றும்          

ஆன்றவர் மக்கள் அனைவரும் தவித்தார்,    

"வீண்துயர் வேண்டாம் வேந்தரே, அவனைச்  

சிறைக்கு அனுப்பிச் செப்பியோன் தன்னை     

விரைவில் அழைத்து வினவுவோம்!" என்று   

உரைத்தார் அமைச்சர், ஒப்பினார் மன்னர்.    

சிறையினை நோக்கிச் சென்றான் அழைக்க!    

   

சென்றவன் மீண்டும் திரும்பினன் தனியாய்க்  

கண்டதும் மன்னர் கடுஞ்சின முற்றார்.         

கொற்றவர் கோபக் குறிப்பினைக் கண்டு      

மற்றவ ரெல்லாம் மனத்திகி லுற்றார்.        

"எங்கவன் சொல்வாய்?" என்றார் மன்னர்.     

இங்கவர் வருவதை ஏற்றிட வில்லை!       

"களங்கம் துடைத்துக் கடுஞ்சிறை நீக்கில்       

விளங்கிடச் செய்ய விரும்பி வருவேன்.    

கொற்றவர் முன்னே குற்றம்செய் தவனாய்  

நிற்கவும் விரும்பேன் நிச்சயம் என்றார்.     

எப்படி வேண்டியும் என்னுரை மறுத்தார்!"     

இப்படி அவனே இயம்பிடும் போதில்       

குறுக்கிட் டமைச்சர் கோபமாய் எழுந்து      

"மறுத்திடும் அவன்பெயர் அறிந்தனை என்றால்  

சொல்லுவாய்!" என்றார் துரிதமாய் "அவரின்

நல்லபேர் யூசுப் நல்லொழுங் குடையோர்!"

என்றான். கேட்டதும் இடிவிழுந் தவராய்

நின்றார் அமைச்சர், நிமிர்ந்தார் மன்னர்.