பக்கம் எண் :

215


தன்னையே உயர்வாய்ச் சாற்றுவர் போன்று   

என்னையே உயர்வாய் இயம்பிட மாட்டேன்.   

நாயனின் நல்லருள் நமக்கிலை யாயின்        

தீயவை ஏற்கத் தூண்டிடும் இச்சை              

மனிதனின் உடலில் மலர்ந்திடும் உணர்ச்சி      

புனிதமும் அழித்துப் புரிந்திடும் பாபம்;          

எனவே எனையான் தூயவன் என்று           

கணமும் நினையேன் காவல!" என்று          

சுருக்கமாய் யூசுப் சொல்லிய யாவும்          

உருக்கமாய்க் கேட்டு உளமகிழ் வோடு         

"நம்மிடம் நீரே நன்மதிப் புற்றீர்.                  

உம்மிடம் யாமே நம்பிக்கை யுற்றோம் !"        

என்றார் மன்னர், இருந்தவ ரெல்லாம்           

ஒன்றாய் இதையே ஒப்பிட லானார் !            

 

மதிமிகும் அறிஞரும் மன்னரும் யூசுபைத்     

துதிசெயும் போதினில் சொல்லரும் மகிழ்வினால்  

சுலைகா துயர்முகம் சுடர்மதி யானது;       

குலையா இன்பமே கொண்டதாய்க் காதலர்    

திருமுகம் ஒருகணம் திரும்பி நோக்கினள்.    

மறுகணம் அவள்முகம் மணமகள் நாணமாய்க்   

கவிழ்ந்தது தரையினில் கண்டனர் அனைவரும் .

குவிந்தது அமைச்சரின் கோதிலா நெஞ்சமே !   

நின்றிடும் யூசுபை நிமிர்ந்து நோக்கிய        

அண்ணலர், "யூசுபே அமருக!" என்றதும்      

"உங்களின் நாட்டினில் உணவுப் பஞ்சமே       

தங்கிடும் என்று யான் சாற்றிய உண்மையை    

ஒப்பிஎன் வார்த்தையை உறுதியாய் நம்பிடில்   

செப்பிடும் ஓர்வழி செம்மலே ஆய்குவீர்!"     

என்றிடும் யூசுபை ஏந்தலர் நோக்கியே       

"நன்றென ஒப்புவோம் நவிலுக!" என்றனர்.