"பஞ்சமே நாட்டினில் பரவுமுன் தானியம் மிஞ்சவே சேர்த்திடில் மிடிமையை நீக்கலாம்! கலக்கிடும் பஞ்சமே கடந்திட தேசியக் களஞ்சியம் காத்திடும் கடமையை என்னிடம் தந்திடில் நிச்சயம் தனியவன் கருணையால் வந்திடும் பஞ்சமே வளராது செய்திட இயன்றிடும்!" என்றுடன் யூசுபு இயம்பினார். "முயன்றிடும் நோக்கமே முற்றிலும் ஒப்பினோம். வலியவே பொறுப்பினை வரித்திடும் உம்மிடம் நலிவையே நீக்கிட நம்முடையத் தானியக் களஞ்சியம் காத்திடும் கடமையைத் தந்தனம், விளக்கிய வண்ணமே விரட்டுக பஞ்சமே!" என்றனர்அரசரே, ஏற்றனர் யூசுபே ! நன்றென யாவரும் நல்லுரை கூறினர் ! கூட்டினார் மக்களைக் கொன்றிடும் பஞ்சமே நாட்டிலே தோன்றிடும் கேட்டினைச் சாற்றினார். வாட்டிடும் பஞ்சமே வந்திடும் முன்னரே நாட்டினில் தானியம் கூட்டிட வேண்டினார் ! விளைந்திடும் தானியம் முழுவதும் மன்னரின் களஞ்சியம் சேர்ப்பதைக் கடமையாய் ஆக்கினார் ! உயிரினைக் காக்கவே உணவெனும் உண்மையைப் பயின்றிட வேண்டினார், பசியினைத் தாங்கிட முயன்றிடக் கூறினார், முன்னிலும் உண்பதை இயன்றிடும் வரையிலும் குறைத்திட ஏவினார் ! உழைத்திடத் தயங்குவோர் உண்பது இறைவனுக் கிழைத்திடும் அநீதியென் றெண்ணிட’க் கூறினார் ! "கற்றவ ராயினும் கொற்றவ ராயினும் மற்றவ ருழைப்பினில் வாழ்ந்திட முயல்வது கொள்ளையென் றிறையவன் எள்ளுவ தாகிடும் கள்ளரை விடஇவர் கடையரே!" என்றனர். நாட்டினர் யாவரும் நம்பினர் யூசுபை. கேட்டினை நீக்கிடக் காட்டிய அவர்வழி நின்றிட உறுதியை நெஞ்சினில் கொண்டனர் யாவரும் கொற்றவர் மகிழ்ந்தனர்! |