பலவந்தம் செய்ததாகக் குற்றம் சாட்டுகிறாள். ஆனால் உண்மையை அமைச்சர் அஜீஸ் உணருகிறார் என்றாலும், இதைக் காரணமாக வைத்து சுலைகாவையும் யூசுபையும் பிரித்து வைக்கத் திட்டமிட்டு யூசுபைச் சிறைப்படுத்துகிறார். அங்கேயும் தொடர்ந்து சென்று முயற்சி செய்கிறாள் சுலைகா. ஆனால் யூசுப் அவள் முயற்சிக்கு இணங்கவில்லை. ‘சிறைபட்டு வாழ்ந்தாலும் வாழ்வேன், கறைபட்டோ குறைபட்டோ வாழமாட்டேன்’ என்று சத்தியத்தின் பால் உறுதியாக நின்று தவறிழைக்க மறுக்கிறார் யூசுப். மிசுரின் மன்னர் கண்ட ஒரு பயங்கரக் கனவுக்குப் பலன்கூறும் காரணத்தால், சிறையிலிருந்து விடுதலை பெற்ற யூசுப், சிறைப்படுவதற்கான எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது நிரூபணமாகி அந்த நாட்டின் உணவு அமைச்சராகவும் முதலமைச்சர் அஜீஸின் மரணத்திற்குப்பின், முதலமைச்சராயும் ஆகிறார். அஜீஸின் மரணத்தால் விதவையாகிவிட்ட சுலைகாவை யூசுபுக்கே மணமுடித்து வைக்கிறார் மன்னர். இதுதான் யூசுப் - சுலைகாவின் கதையாகும். இதனை இனியதொரு தமிழ்க் காப்பியமாக ஆக்கித் தந்திருக்கிறார் கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனார். அவர் நாடறிந்த நல்ல கவிஞராவார். அவரது இந்தக் காப்பியம் முழுவதிலும் அவரது கவித்திறன் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. ஆண்டிருக்கும் சொற்கள் மிக எளியவை. நடைமிகத் தெளிவாக, சரளமாக, ஆற்றொழுக்குப் போல் அமைந்திருக்கிறது. எந்த ஒரு சொல்லின் பொருளையும் தெரிந்து கொள்ள அகராதியைப் புரட்டத் தேவையே இல்லை. அத்தகைய எளிய சொற்களால், மிக ஆழ்ந்த உணர்ச்சிகளையும் மிகத் தெளிவாய்ச் சித்திரித்துக் காட்டிவிடுகிறார் கவிஞர். கவிஞர் மேற்கொண்ட இந்தப்பணி, மிகவும் கடினமானது. திருமறை கூறும் இக்கதையின் நிகழ்ச்சிகளுக்குக் காப்பியவடிவம் கொடுத்தாக வேண்டும். இது ஒரு கூரிய கத்தியின் மேல் நடப்பது போன்றது. இந்தச் சாதனையைக் கவிஞர் மிக வெற்றிகரமாய்ச் செய்து முடித்திருக்கிறார். பாத்திரங்களின் பண்புகளையும், |