பக்கம் எண் :

22


அவர்களிடையே   நடைபெறும்   உரையாடல்களையும்,   உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் கவிஞர் தம் திறமை முழுவதையும் காட்டியிருக்கிறார். அதே சமயத்தில் யூசுப் ஒரு நபி என்பதையும், சுலைகா அந்த நபிக்கு மனைவியாகப் போகிறவளென்பதையும் கவிஞர் மறந்து விடவில்லை.

   இந்தக்  காப்பியத்தினூடே  கவிஞர்  பல அரும்பெருங் கருத்துக்களையும் வெளிப்படுத்துகின்றார். யூசுப் சிறுவனாக இருக்கும் போது இறைவனின் தன்மையை

சூழும் இருளும் விரைந்தோடும்

சூரியன் மீண்டும் ஒளி காட்டும்

வாழும் உயிர்கள் அத்தனையும்    

வாய்ப்புக் கேற்ப வாழ்ந்திடவே

தாழ்வும் வாழ்வும் சமமாக்கித்    

தந்தான் இறைவன்"  

என்று பாடுகிறார் கவிஞர்.

   ஒருவர் ஆழ்ந்த துயரத்திலிருக்கும் போது அவருக்குப் பொழுது நீண்டு கொண்டே இருப்பதாகவும், அது மெள்ளமெள்ள நகர்ந்து கொண்டே போவதாயும் தோன்றுவது மனித அனுபவம். இந்த அனுபவத்திற்கு ஒரு உருவகம் கொடுத்து, இரவு முழுவதும் சுலைகா துயரிலே துவண்டு கொண்டிருப்பதைச் சொல்லும் போது -

  ‘சோர்ந்து கிடக்கும் சுலைகாவின்

    துயரம் காணச் சகியாமல்

   ஊர்ந்து சென்றனள் இரவுத்தாய்’

என்று  சுட்டிக்  காட்டுகிறார்  கவிஞர்.  சுலைகா  தன்  கனவிலே தோன்றிய  ஆணழகருடன்  பேசுகின்ற  பேச்சையும்,  தன்  உணர்ச்சிகளை அவள் வெளிப்படுத்துவதையும் கவிஞர் பல அருமையான பாடல்களின் மூலம் வடித்துத் தருகிறார்.