தான்பெற்ற பெருஞ்செல்வம் இழந்த போதும் தனைப்பெற்ற தாய்தந்தை இழந்த போதும் தான்பெற்ற ஒருமகவை இழந்த போதும், தன்னுயிராம் காதலியை இழந்த போதும், தான்பெற்ற பெருமையினை, தன்மா னத்தைச் சற்றேனும் இழப்பதற்குச் சகிப்பா ருண்டோ? தான்பெற்ற இல்லாளின் தவற்றிற் காகத் தகைமைமிகும் அமைச்சரஜீஸ் உயிர்கொ டுத்தார் ! மாடத்தில் வீற்றிருக்கும் மன்ன ரின்பால் மந்திரியின் மரணத்தைக் கூறச் சொல்லிக் கூடத்தின் மத்தியிலே தனது நெஞ்சம் குமுறிடவே யூசுபு உலாவ லானார் ! நாடெங்கும் அமைச்சரஜீஸ் மரணச் செய்தி நவின்றிடவே பேரரசர் ஆணை யிட்டார் ; வீடெங்கும் தம்தேசக் கொடியைத் தாழ்த்தி வெகுதுயரம் கொண்டனரே மிசுரின் மக்கள் ! யூசுபின் போதனை : முதலமைச்சர் அஜீஸுடலை அடக்கம் செய்து முகம்கவிழ்ந்து நின்றிருக்கும் மக்கள் நோக்கி "இதுவரையில் எவருடைய துயரத் தாலும் இறந்தவர்கள் உயிர்பெற்று எழுந்த தில்லை ! கதறுகின்ற நம்குரலால் இறையைச் சேர்ந்தோர் கண்விழித்து வாழ்ந்திடவும் நினைத்த தில்லை ! பதறுவதாற் பயனுண்டோ? முதல மைச்சர் பண்புடைமை பெற்றிடுவோம் !" என்றார் யூசுப். |