பக்கம் எண் :

219


அரசரின் அறிவிப்பு:

 

"ஆற்றலுடன் மெய்யன்பும் அமைந்த யூசுப்

     அறிவித்த அறநெறியை உணர்ந்த மக்காள் !

கூற்றுவனின் வலைப்பட்ட முதல மைச்சர்

     குடிகளுக்குச் செய்தபணி மறக்கப் போமோ !

ஏற்றமிகும் யூசுபை விலைக்கு வாங்கி   

     இந்நாட்டின் கொடும்பஞ்சம் தணிப்ப தற்கே

போற்றுமுயர் தம்பதவி தனையும் யூசுப்  

     பெற்றிடவென் றிறந்தனரோ?" என்றார் மன்னர் !

   

துன்பத்தில் இன்பம்:

 

‘இன்றுமுதல் முதலமைச்சர் பொறுப்பு யாவும்

     யூசுபிடம் ஒப்படைத்தோம் இந்த நாட்டில்

என்றுமவர் இப்பதவி ஏற்றி ருப்பார் !"

     எனமன்னர் இயம்பியதும் மக்க ளெல்லாம்

"நன்று, நன்று !" எனத்துயரம் மறந்து சொன்னார்.

     நற்கனவு பலித்ததுபோல் சுலைகா கொண்டாள் !

சென்றனவே பலதிங்கள். யூசுப் நாளும்  

     திரட்டினரே தானியங்கள் களஞ்சி யத்தே !

  - - x - -