"என்றனுக் கியலா ஒன்றை ஈந்திட வேண்டு வீரேல் நன்றென வழங்கப் போமோ; நடுநிலை நின்று ஆய்வீர்!" என்றிடும் யூசுப் நோக்கி "இரக்கமே அன்றி வேறு ஒன்றையும் உம்மி டத்தே உவந்திட வில்லை !" என்றாள். "இச்சைக்கு அடிமை யாகி ஏங்கிடும் இதயத் துன்பம் நிச்சயம் உணரு கின்றேன், நேர்மைக்கும் அஞ்சு கின்றேன் ! இச்சையை அடக்கி யாண்டால் இன்னலும் இழிவும் நீங்கும் எச்சரிக் கின்ற தேபோல் எண்ணமே மாற்று !" என்றார். "அன்பினுக் காக ஏங்கி அழிவுறும் பெண்ணுக் குங்கள் அன்பதைத் தந்தீர் என்றால் அழியுமோ நேர்மை ?" என்றாள். "பண்பினை அன்புக் காகப் பலியிடல் பாப மாகும். என்பதை யுணர்வாய் !" என்று யூசுபு இயம்ப லானார். "அன்பினை வெற்றி கொள்ள அறிவினுக் காகா தென்றால் பண்பினுக் கியலு மாமோ, பாசமும் பாப மாமோ ? |