பக்கம் எண் :

222


முன்பெனைப் பிறர்ம னைவி          

      என்பதாய் வெறுத்த நீங்கள்

இன்றெனை மறுப்ப தேனோ

      இயம்புவீர்!" என்று கேட்டாள்.

 

"அந்நியர் மனைவி யாக      

      அன்றுநீ ரிருந்த தேபோல்

இன்றுமென் மனைவி யாக  

      இல்லையே உரிமை யற்ற

என்னிடம் உறவு கொள்ள  

      எண்ணுதல் பாச மன்று

பெண்ணிடம் நாண மற்றால்  

      பெரும்பிழை நேரும் !" என்றார்.

 

"அன்பினில் விளைந்த ஆசை   

      அறியுமோ வெட்கம் ?" என்றாள்.

"பண்பினில் வளர்ந்த நெஞ்சம்     

      பலியிட விரும்பா" தென்றார் !

"கண்மனம் கொண்ட ஆண்கள்      

      காதலை மதியார் !" என்றாள்;

"பெண்மனம் சபல முற்றால்  

      பேயென மாறும்" என்றார்.

 

"உண்மையாய் அன்பு செய்யும்     

      ஒருத்தியின் உள்ளம் ஏங்க

எண்ணுவோர் ஆண்மை யற்றோர்

      என்பதை அறிந்தேன் !" என்றாள்.

"பெண்ணுடல் பெற்று விட்டால்     

      பெண்களாய் ஆக மாட்டார்;

பெண்மையை இழந்து விட்டோர்

      பேசிடும் பதுமை !" என்றார்.