பக்கம் எண் :

223


"ஆணுடல் பெற்றோ ரெல்லாம்

      ஆடவர் ஆவ துண்டோ ?

ஆண்மையும் நெஞ்சில் வேண்டும் ;

      அன்புசெய் ஆவல் வேண்டும் !

மேன்மையும் அழகும் பெற்றும்

      வீணிலே அழிக்கும் யாரும்

ஆண்மையை அடைந்தோ ரல்லர்.

      அதிசயப் பிறவி!" என்றாள். வேறு

 

"அறிவழிக்கும் ஆத்திரமேன் அடைகின்றாய் ?"

      என யூசுப் அன்பாய் கேட்க

"பரிவழிக்கும் பாத்திரமாய் நடிக்காதீர் !"

      எனச்சுலைகா பணிந்து சொன்னாள்.

"முறுவலிக்கும் இச்சையினை முறியடித்து  

      வாழ்ந்திடவே முனைவாய் !" என்றார்.

"உருகவைக்கும் நல்லழகை உமக்களித்த

      இறைவனுக்கு உரைப்பீர்!" என்றாள்.

 

"கண்கவரும் வெளியழகில் காதலுறும்   

      பேதமையைக் களைவாய்" என்றார்.

"விண்ணழகும் மண்ணழகும் நின்னழகும்

      என்னழகும் வீணோ?" என்றாள்.

"வண்ண எழில் காண்பதற்கே அல்லாமல்

      உண்பதற்கு வாய்க்கா" தென்றார்

"உன்னெழிலை அருகிருந்து காணுகின்ற

      உரிமைதர ஒப்பும்!" என்றாள்.

 

"என்னுறுதி குலைந்திடவே உனையருகில்

      அனுமதியேன் !" என்றார் யூசுப்.

"பெண்ணுறுதி சிதைத்திடவே கனவில்வரல்

      பிழையலவோ !" சுலைகா கேட்டாள் !