பக்கம் எண் :

224


"தன்னுறுதி மாற்றுகின்ற கண்களினைப்

      பெயர்த்தெறிதல் சரியாம் !" என்றார்

"என்னிரண்டு கண்களையும் பெயர்த்தாலும்

      என்னிதயம் இருப்பீர்!" என்றாள்.  

 

"ஏதுரைத்த போதினிலும் வாதிடுவோர்

      ஏற்காரென் றின்று ணர்ந்தேன்;  

தீதுறைந்த சிந்தையிலே ஓதுகின்ற

      நீதிகளும் சிதையக் கண்டேன் !

வாதுசெயும் மாதரசே, அதிவிரைவாய்  

      என்நினைவு மறப்பீர்!" என்றார்.  

காதடைத்துக் கண்கலங்கி நின்ற அவள்  

      அவரடியில் கதறி வீழ்ந்தாள் !

 

செய்திடுதல் அறியாது நின்றிருந்த

      யூசுபு சிலையாய்க் கண்ணீர்

பெய்தபடி அசைவற்ற நிலையானார்.

      அந்நேரம் பெருமூச் சொன்றை

எய்தபடிப் பேரரசர் ஆங்குவந்து  

      கைபிடித்து "யூசுப்!" என்றார்.

மெய்யுணர்வு பெற்றவராய் யூசுபு  

      விழிதுடைத்து வருந்த லானார் !

 

"உண்மைநிலை யானறிவேன், உங்களது

      மனத்தூய்மை உணரும் வண்ணம்

அண்மையினில் திரைமறைவில் நின்றிருந்து

      அத்தனையும் அறிந்தேன். யாரும்

உண்மையினி லுங்களைப்போற் பெண்மையினை

      வெற்றிகொள்ளும் உறுதி கொள்ளார் !"

என்றரசர் கூறிடவே நின்றிருந்த

      யூசுபு இயம்ப லானார்.