வேண்டிய அளவிற்குச் சுவையாகவும் சிறப்பாகவும் எழுதி இருக்கிறார் கவிஞர். "என்னிதயச் சோலையினில் தாம்விதைத்த காதல்விதைக் கேற்ற வண்ணம் என்னுணர்வுக் குருதியினைத் தண்ணீராய்ப் பாய்ச்சிவளர்த் தின்ப முற்றேன்: உன்னுடைய காதல்விதை உயர்கனிகள் தருமரமாய் ஓங்கி, என்றன் மென்னுடலில் நரம்பாக வேரோடி விட்ட பின்னே வெட்டப் போமா?" என்று வினவுகிறாள் சுலைகா. ‘வாய்மையெனும் மாளிகையின் மதிலுடைக்கப் பெருமரமே வளரக் கண்டால், தூய்மையெனும் கோடரியால் பிளந்தெறிவர் மாளிகையின் சொந்தக் காரர்! தாய்மையெனும் அரும்பதவி தாங்குகின்ற பெண்குலமே தவறு மாயின், மாய்ந்தொழியும் மனிதநெறி அதற்குதவும் ஆடவரும் மிருக மாவார்!’ என்று மிக அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும், கம்பீரமாகவும் யூசுப் பதில் கூறுவதாகப் பாடுகிறார் கவிஞர். நேர்மை நின்று தவறாத யூசுப், என்ற முறையில் அவர் உருவாக்க நினைத்த சமுதாயம் எத்தகையது என்பதையும் கவிஞர் ஆங்காங்கே சுட்டிக் காட்டுகிறார். ‘தனியொருவர் தவறிழைப்பின் அவர்குலத்தை, சந்ததியைச் சார்ந்தவரைச் சமுதாயத்தின் தனிப்பெருமை அனைத்தையுமே தகர்ப்பதே போல்... என்பது எத்தகைய நடைமுறை உண்மை! இத்தகைய கருத்துச் செறிவும், கவிதை நயமும் காப்பியம் முழுவதும் மண்டிக் கிடக்கின்றன. சொல்லின் எளிமையும், நடையின் சரளமும், உணர்ச்சியின் ஆழமும், கதையின் சுவையும |