பக்கம் எண் :

248


"அச்சமும் தயையும் போக்கி            

      ஆள்பவர் குறையைக் கூறல்

மெச்சிடத் தக்க செய்கை            

      மிரட்சியே எவர்க்கும் வேண்டாம்!

எச்சிறு குறையு மில்லை             

      என்பதைச் சொல்வார் கூட

இச்சபை ஒருவ ரேனும்             

      இல்லையா?" என்றார் யூசுப்.

 

"குறையிது என்று காட்டக்            

      குறுகியே கோழை யானோர்

குறையெது மில்லை என்று          

      கூறவும் ஊமை யானால்    

கறைபடும் ஆட்சி, என்றன்         

      கடமையும் களங்க மாகிக்    

குறைபடக் கூடும்" என்று         

      குமுறினார் அமைச்சர் யூசுப்.

 

"இல்லாத குறைகள் நாட்டில்          

      இருப்பதாய் இயம்பு கின்ற   

பொல்லாத குணம் படைத்தப்        

      பொய்யர்கள் நம்மி டத்தே   

இல்லாத தெண்ணி எண்ணி            

      இதயமே களித்தே" னென்று   

எல்லார்க்கும் பொதுவாய் மன்னர்    

      இயம்பினார், நகைத்தார் யூசுப்  

 


வேறு

 

"குற்றமிலை என்பதையும் கூறுதற்கு    

      அஞ்சுகின்ற குடிகள் தம்மைக்

கொற்றவரே ஊக்குவித்தால் கோழைமையை

      வளர்க்கின்ற குறிக்கோ ளொக்கும்;

மற்றவர்கள் உணர்ச்சியினை மதிக்கின்ற

      மாண்பினையே வளர்த்து, நாட்டில்

குற்றமிலா நல்லரசு நடத்திடுவோம்!"

      என்றமைச்சர் கூற லானார்.