வல்லரசு என்றஞ்சி வாய்பொத்தி வாழ்வதினில் மயங்கி டாமல் நல்லரசு நடத்திடவே மக்கள் துணை செய்திடவே நாடு கின்ற சொல்லரசர் யூசுபினை இல்லரசு காணவைத்த மிசுரின் தோன்றல் "நல்லரசு கண்டிடவே எங்கள் கடன் யாதெனினும் நவில்வீர்!" என்றார். "எம்முடைய குறைகளென இயம்புபவர் இச்சபையில் இல்லை என்றால் உம்முடைய குறைகளினில் ஒன்றிரண்டை யானுரைப்பேன் உற்றுக் கேட்பீர்! நம்முடைய உயிருண்ண வரும்பஞ்சம் வென்றிடவே நவின்ற தெல்லாம் தம்கடனாய்ச் செய்பவர்கள் எத்தனைபேர்?" எனயூசுப் சபையைக் கேட்டார். "விளைகின்ற தானியத்தில் ஐந்திலொன்றை வரியாக விதித்தீர் தந்தோம், விளைபொருளின் மிகுதியினை அரசுக்கே விற்றிடவும் செய்தீர் விற்றோம்; அலைபாயும் நைல்நதியின் இருகரையும் வளம்பெருக்கும் அவையோர் எம்மில் இலைமறைகாய் என்றேனும் குறைகளிலை!" என்றொருவர் இடையில் சொன்னார். "தானியத்தில் வரி என்றேன் தடையில்லை எனத்தந்தீர், தந்த தன்றி மானியத்து விலைவைத்து மிகுதியினை அரசுக்கே வழங்கச் சொன்னேன்; தானியத்தைப் பதுக்கிவைத்து அதிகவிலை பெறுவதற்கு சதியே செய்யும் ‘நாணயத்தை’ அறிந்தேதான் வருந்துகிறேன்!" என்றமைச்சர் நவின்றிட் டாரே. |