பக்கம் எண் :

251


தாய்மை வேண்டுதல்

இயல் - 49
 

சொல்லழகுச் செயலழகால் மக்கள் ஏற்கும்

      தொண்டழகால் நாட்டினரின் சுமையைத் தாங்கும்

 நல்லரசு நடத்துகின்ற அமைச்சர் யூசுப்       

      நன்னிதியாய் அடைந்திட்ட துணைவி யோடு

இல்லரசு நடத்துகின்ற இச்சை கொண்டு      

      இனிமைதரும் உள்ளுணர்வால் இல்லம் செல்ல

பல்லழகும் படைத்திட்ட சுலைகா மெள்ள   

      பார்த்திட்டாள், பாங்கியரும் அப்பால் சென்றார்!

 

கண்மலர்ந்து இதழ்மலர்ந்து கனவு தந்தக்    

      கட்டழகர் தொட்டவுடன் உடல் சிலிர்க்கப்

பொன்மலர்ந்துப் புன்னகைக்கும் பொலிவு பெற்றப்

      பூங்கொடியாள் புத்தழகு பொங்கி நிற்க

விண்மலர்ந்து ஒளிபரப்பும் மதிமு கத்தே    

      விரிகின்ற முகிலிருளே படியக் கண்டு

"நின்னகத்தின் மலர்ச்சியிலே கலக்க மென்ன

      நிறைமதியே உரைத்திடுக!" என்றார் யூசுப்.

 

"நாட்டவரின் தேவையினை நவிலு முன்னே   

      நன்குணரும் ஆற்றலினைப் பெற்ற நீரே

வீட்டவரின் தேவையினைப் பார்வை கொண்டே

      விளங்குதற்கு முடியாதா? திறமை யாவும்

காட்டிடுவீர் ஆட்சியிலே, மக்க ளாற்றும்      

      கடமையினை உணர்த்துவதில் கண்ணாய் நிற்பீர்;

ஆட்டுகின்ற ஆசையினால் தவிக்கு மென்னை

      அறியீரா?" எனச் சுலைகா அணுகிக் கேட்டாள்!