"உண்டுறங்கிக் கிடப்பதையும் ஓய்வுச்சுகம் காண்பதையும் ஒதுக்கி வைக்க அன்றிருந்தே கூறுகின்றேன், என்றும்போல் இயங்குகின்றீர்; அழிவை நோக்கிச் சென்றிடுவோர் திரும்பிடவும், செயலற்றோர் திருந்திடவும் செய்வதற்கு இன்றிருந்து புதுவழியில் இயங்கிடவே நினைக்கின்றேன்!" என்றார் யூசுப் "எவ்வழியை இயம்பிடினும் அவ்வழியில் நாட்டினரை இயக்கு தற்கு ஒவ்வுகிறோம்!’ என்றிட்டார் படைத்தலைவர், அவருறுதி யுணர்ந்த யூசுப் "ஒவ்வொருவர் உணர்வினிலும் செய்கையிலும் இவ்வுறுதி ஒன்றா விட்டால் எவ்வழியும் அழிவிருந்து இந்நாட்டைக் காக்காது!" என்று ரைத்தார். "கொன்றழிக்கும் கொடும்பஞ்சம் வருமுன்னர் தேவையினைக் குறைக்கச் சொன்னால் இன்றைக்குக் கிடைப்பதெலாம் என்றைக்கும் கிடைக்குமென எண்ணி விட்டீர்! ஒன்றிரண்டு ஆண்டுகளில் விண் பொய்த்து மண்பொய்த்து உயிர்கள் யாவும் குன்றுகின்ற நாளினுக்கு உதவிடவே உணவுப்பொருள் குவிப்போம்!" என்றார். வேறு ‘பசுக்களைப் பசுக்க ளுண்ணப் பார்த்திட்ட கனவை நம்பிப் பசித்திடச் செய்யும் பஞ்சம் பரவிடும் என்று சொல்லி புசித்திடும் உணவிற் பாதி போதுமாய்க் கொள்ள வைத்து நசித்ததே போதும்!" என்று நடுவிலே ஒருவர் சொன்னார். |