‘என்றைக்கோ வரும்பஞ் சத்தை இன்றைக்கே வரவே செய்து அன்றன்றின் உணவுக் காக அலைந்திடும் மக்கள் துன்பம் மன்றத்தில் நவின்ற தற்கே மன்னிக்க வேண்டு கின்றேன்!’ என்றொரு குரலைக் கேட்டு எல்லோரும் வியந்து நின்றார். "எவரையும் வருத்து கின்ற எண்ணமே நமக்கு இல்லை, தவற்றினைத் திருத்து தற்கே சட்டங்கள் இயற்று கின்றோம்; சுவற்றினைச் சிதைய விட்டுச் சித்திரம் காக்கச் சொன்னால் எவரதைச் செய்யக் கூடும்?" என்றனர் அமைச்சர் யூசுப் ‘குறைகளைக் குறித்த வர்க்குக் கூறுவேன் நன்றி, அந்தக் குறைகளைத் தவிர்க்கும் மார்க்கம் குறிப்பிடில் ஏற்போம்! என்று உரைத்திட்ட மன்னர் நோக்கி ஒப்பரும் யூசுப் கேட்டார்: "இறையவன் கனவு பொய்க்கும் என்பவ ருண்டோ?" என்று, ‘பஞ்சமோ பஞ்ச மென்று பயத்தினைப் பரப்பிப், பின்னர் பஞ்சமே வராது போயின் பழியினைச் சுமப்பார் யாரே? எஞ்சிய நாளி லேனும் இருப்பதை யுண்டு வாழக் கெஞ்சிடு கின்றோம்!’ என்று கிளர்ந்தொரு கிழவர் கேட்டார். |