பக்கம் எண் :

254


"எம்முடை விருப்பத் திற்கே

      இச்சபை கூட்டி னாலும்

உம்முடை விருப்பம் ஏதும்

      உண்டெனில் உரைப்பீர்!" என்று   

செம்மலர் யூசுப் பக்கம்  

      திரும்பியே கேட்க, "ஏதும்

எம்மிட மில்லை, மற்றோர்

      இயம்பிடில் கேட்போம்!" என்றார்.

 

"வாளினும் கூர்மை வாய்ந்த

      மதிவளம் பெற்ற யூசுப்

தோளினில் நாட்டு மக்கள்

      சுமையினை சுமக்கச் செய்த

நாளினி லிருந்து இந்த   

      நாள்வரை குறைக ளின்றி

ஆளுதல் கண்டோம், அந்த

      ஆற்றலைப் போற்று கின்றோம்!"

 

"காரியம் முடிக்கும் மட்டும்

      கண்ணுறங் காத யூசுப்

கோரிய தெல்லாம் தந்தோம்

      கோரிடா வற்றை மக்கள்

நேரினில் தருவ தென்ற   

      நினைவினால் அவையைக் கூட்டி

பேரிகை முழங்கச் செய்தோம்,      

      பெருமனம் பெற்றே வந்தீர்!"

 

"மன்னவர் - அமைச்சர் என்று

       மற்றையோர் பிரித்துப் பேசல்

இன்றைய முதலாய் வேண்டாம்

       என்பதால் நாட்டை யாளும்

என்றனின் உரிமை யாவும்

       யூசுபுக் களித்தேன்!" என்று

மன்றமே வியந்து நிற்க

       மக்களுக் குரைத்தார் மன்னர்.