"வேண்டுவதை விளம்பிட்டால் முடிந்த தெல்லாம் விரைவினிலே தந்திடுவேன்!" என்றார் யூசுப். "நீண்டபெருந் தவத்தினுக்குக் கிடைத்த வாழ்வை நிறைவுபெறச் செய்திடுவீர்!" என்று கேட்டாள். "மீண்டுமதைப் புதிராக வினவி டாமல் விளக்கமொடு வேண்டிடுவாய்!" என்றார் யூசுப் "மாண்டுவிட்ட வாழ்க்கையினை மலர வைத்தீர், மற்றதையும் தந்திடுவீர்!" எனச் சிவந்தாள். "இல்லாளாய் வாழ்ந்திடவே இச்சை யுற்றேன், என்னிலைக்கு இறையவனும் கருணை கூர்ந்து நல்லாளன் எனையாளச் செய்தான், அந்த நற்றவத்தின் பெரும் பயனைச்சுவைத்துப் பார்க்க எல்லோரும் என்றனையே தூண்டு கின்றார்; இன்றுவரைத் தாயாக வில்லை என்று சொல்லாமல் பார்வையினாற் சுடுகின் றார்என் துயரெல்லாம் இதுவேதான்!" எனக் கவிழ்ந்தாள். "ஊர்ந்தசையும் சிறுகுழந்தை நிமிர்ந்து நின்று ஓடிவிளை யாடிடவே துடித்தல் போன்று தேர்ந்தவரின் துணையாகி இல்ல றத்தைத் தேடியவர் தலைமகவைப் பெறுவ தற்கு ஆர்வமுறல் இருவருக்கும் பொதுவே யாகும் அன்னைதந்தை யாக்குவது இறைவி ருப்பம்! பார்மிசையே பெறுகின்ற அனைத்தும் எய்தப் பணிவோடு வேண்டிடுவோம்!" என்றார் யூசுப். "தாரமென ஏற்றிட்ட உங்கள் பாலே தாயாக்கித் தகைமைதரக் கேட்பேன்!" என்றாள். "தாரமெனும் பதவிபெற்ற நீயே என்னைத் தந்தையென உயர்த்திடுதல் வேண்டும்!" என்றார். "சீர்மையொடு நேர்மையையும் பெற்ற நீரே தெய்வத்தின் பேரருளைக் கேட்பீர்!" என்றாள். ஈருடலும் பிணைந்திடவே இருவர் நெஞ்சும் இணைந்திடவே தழுவிவிழி மலர லானார்! |