பக்கம் எண் :

257


மணிமுடி மறுத்தல்

இயல்-50

காட்சிக்கு எளியோ ராகக்

      கடமையில் வலியோ ராக

வீட்சியி லிருந்து நாட்டை

      வெற்றியில் செலுத்து வோராய்

ஆட்சியின் பொறுப்பில் யூசுப்

      அமர்ந்திட்ட மூன்றாம் ஆண்டில்

மாட்சிமை மிக்க மன்னர்

      மக்களைக் கூட்ட லானார்

 

பொதுவினில் அவையைக் கூட்டும்

      போதெலாம் புதிய சட்டம்

எதனையோ சொல்வ ரென்று

      ஏதேதோ எண்ணி மக்கள்

அதிர்வுடன் அவையில் கூட

      அரசரும் அமைச்ச ரோடு

எதிர்ப்புறம் வந்தார், வாழ்த்தி

      எல்லோரும் இருக்கை கொண்டார்!

 

மன்றத்து மக்க ளெல்லாம்

      மன்னரின் முகத்தைப் பார்க்க,

மன்னவர் அமைச்சர் யூசுப்

      மதிமுகம் கூர்ந்து பார்க்க;

"என்னரும் நண்பீர், நம்மின்

      ஏந்தலர் ஆணை ஏற்று

இன்றைய அவையில் கூடி

      இருக்கிறோம்!" என்றார் யூசுப்.