பக்கம் எண் :

258


மணிமுடி செங்கோல் ஏந்தும்              

      மன்னனா யின்றி மக்கள்             

பணிசெய இயலா தென்று              

      பகர்ந்தது போன்று என்னை   

அணிசெய நினைத்த மன்னர்            

      அன்பினால் உரைத்த தெல்லாம்

இனியொரு கணமும் மக்கள்            

      ஏற்றிடார்!" என்றார் யூசுப்.  

 

"ஆட்சியின் அதிகாரங்கள்               

      அனைத்துமே அரசர்க் கென்று

சாட்சியம் சொல்லும் முன்னோர்        

      சரித்திரம் அறிவார் மக்கள்  

சூட்சியால் - சுயந லத்தால்         

      சூழ்நிலைச் சாத கத்தால்     

ஆட்சியைக் கவர்ந்தோ னாக         

      ஆக்கிடீர்!" என்றும் சொன்னார்.

 

"மன்னவர் விருப்பம் தன்னை           

      மறுப்பவ னாக என்னை     

எண்ணிடல் வேண்டாம், இங்கு         

      எனக்கென ஏதும் வேண்டேன்!"

என்றவா ரெழுந்தார் யூசுப்,           

      இருந்தவ ரெல்லாம் ஆர்த்து

‘நன்றுநன்’ றென்றார், கண்ணீர்           

      நழுவிட மன்னர் சொல்வார்:

 

"என்னுடை விருப்பம் ஏற்பார்           

      எவருமிங் கில்லை, யூசுப்  

சொன்னதை ஏற்கும் மக்கள்           

      சூழ்ந்துளச் சபையில், நாட்டின்

மன்னவ னாகச் செங்கோல்           

      மணிமுடி சுமப்போ னாக     

என்னையே நடிக்கச் சொன்னால்      

      ஏற்கின்றேன் ஆணை!" என்று.