பக்கம் எண் :

259


பெருமை தரும் பிணி

இயல்-51

வேல்கொண்டப் பெருவீரர் சூழ்ந்து நிற்க  

      வேந்தரவை முடிந்தவுடன் அமைச்சர் யூசுப்

கோல்கொண்ட சாரதியைக் கூர்ந்து நோக்கக்            

      குதிரைத்தேர் அருகினிலே ஊர்ந்து நிற்க

வாள்கொண்டக் காவலர்கள் வழிய மைக்க              

      வளைந்துநின்ற பெருமக்கள் வாழ்த்தொ லிக்கத்

தோள்கொண்டக் கடமைகளைச் சிந்தை கொண்டு        

      சுலைகாவின் முகம்காணப் புறப்பட் டாரே!

 

ஆடிவரும் மடமயிலார் தோழியர்கள்                

      அங்குமிங்கும் பரபரத்து அலுவல் செய்ய

ஓடிவரும் புரவிகளின் ஓசை கேட்டு                

      உவகைமிக தாதியர்கள் உற்று நோக்கித்

தேடிவரும் பேரமைச்சர் வருகை தன்னைச்          

       சிறுநகையால் சுலைகாவுக் குணர்த்த லானார்

வாடிநின்ற கொடி மழையால் மலர்தல் போல       

      மனம்மகிழ்ந்த சுலைகாவும் முகம் மலர்ந்தாள்!

 

பாய்ந்துவந்தப் புரவிகளும் ஒய்ந்து நிற்கப்         

       பாங்கியர்கள் இருபுறமும் ஒதுங்கி நிற்க

ஆய்ந்துணரும் ஆற்றல்மிகு அமைச்சர் யூசுப்       

      அருகிருந்த சேடியரின் இளம் முகத்தில்

தோய்ந்திருக்கும் துயர்கண்டு "நீவி ரெல்லாம்     

      சோர்ந்திருப்ப தெதற்காக? உம்மை யெல்லாம்

தாய்போலக் காத்திருக்கும் சுலைகா எங்கே        

        சாற்றிடுக!’ என்றபடி நடக்க லானார்.