பேச்சின்றிப் பின்தொடர்ந்த மூத்த தோழி பெருமையொடு அமைச்சரது அருகிற் சென்று "மாச்சரிதை படைக்கின்ற அமைச்ச ரேறே மகிழ்வுதரும் ஒருசெய்தி கூறு தற்குக் கூச்சத்தால் நாணுகிறேன், எனினும் மற்றோர் கூறிடுமுன் கூறத்தான் துணிந்தேன்!" என்றாள் ஆச்சரிய முற்றவராய் அமைச்சர் யூசுப் ‘அப்படியே கூறிடுக!’ என்று கூர்ந்தார். "எண்ணம்போல் இல்வாழ்வை இனிதே பெற்ற எழிலரசி நும்தலைவி தைமூஸ் செல்வி என்றும்போ லில்லாமல் பசியே இன்றி இருக்கின்றார், ஊட்டுவித்தப் பழமும் பாலும் உண்டாலும் செரிக்காமல் குமட்டு கின்றார் உறக்கத்தின் மயக்கத்தில் உலாவு கின்றார் ஒன்றுபட்ட இல்லறத்தின் பரிசி லாக உவந்திட்ட நோயிதென"ச் சொன்னாள் தோழி பிணியுற்றாள் எனச்சொல்லப் பெருமை யுற்றுப் பேசுகின்றத் தோழிக்கு அமைச்சர் யூசுப் கனிவுற்றப் பார்வையினால் நன்றி கூறிக் கருவுற்ற நாயகியைத் தழுவிப் போற்றி இனிமைபெற விரைந்திட்டார் குறிப் பறிந்து எல்லோரும் அகன்றிட்டார் சுலைகா கொண்ட தனிமையினைக் கலைத்திட்டார், தாய்மைப் பேறு தந்திட்ட புத்தழகை அவளும் தந்தாள். நிறைவான நெஞ்சிரண்டும் ஒன்றை யொன்று நெருக்கிடவே இருவருமே தழுவி நின்று மறைவான தென்றாலும் அனைத்தும் ஆள வல்லவனாம் இறையவனின் ஆற்றல் எண்ணி குறையாக இருந்திட்டக் குழந்தைச் செல்வம் கொடுத்திட்ட கருணையினைத் துதித்துப் போற்றி விரைவாகப் பெற்றளிக்க சுலைகா வின்பால் வேண்டிநின்ற நாயகர்வாய் பொத்த லானாள். |