பக்கம் எண் :

261


யாக்கூபின் நம்பிக்கை

இயல்-52

தன்னுயிரில் மேலாக வளர்த்த யூசுப்

     தமையர்கள் பொறாமையினால் தமைப் பிரிந்த

அன்றிருந்தே நோயுற்ற தந்தை யாக்கூப்     

     அன்புமகன் புன்யாமீன் தனைய ழைத்து

"இன்றிருந்து எங்கேயும் சென்றிடாமல்     

     என்னோடே இருந்திடுவாய், இயம்புவற்றில்

ஒன்றேனும் மறவாமல் நெஞ்சில் வைத்து     

     உனதண்ணன் வரும்போது உரைப்பாய்!" என்றார்.

 

"முன்பிறந்த அண்ணன்மார் பதின்மர் பாலும்

     மொழியாத வற்றினையே அனைவ ருக்கும்

பின்பிறந்த என்னிடத்தே பேசு கின்ற  

     பேரன்பு படைத்திட்ட தந்தை யாரே,

கண்திறந்த நேரமெலாம் அண்ணன் யூசுப்  

     கவலையினால் அழுதழுது கண்கள் மங்கிப்

புண்ணடைந்த நெஞ்சத்தைத் திறந்தி டாமல்     

     பொறுத்திருப்போம்!" என்றிட்டார் புன்யா மீனே.

 

"என்னுடலின் ஓருறுப்பாய் இருந்த யூசுப்    

     எனைவிட்டுப் பிரிந்திட்ட காலந்தொட்டு

துண்டுபட்டப் பல்லியின்வால் துடித்தல் போலத்

     துடிக்கின்ற இதயத்தைச் சுமக்கும் என்னை

கண்டிருந்தும் காணாமல் நழுவி வாழக்  

     கற்றிருக்கும் உன்மூத்தோர் எவரிடத்தும்

விண்டிடவே முடியாத வற்றை யுன்பால்    

     விளம்புகிறேன் கேட்டிடுக!" என்றார் யாக்கூப்