பக்கம் எண் :

262


"உன்னுடைய அன்னையரே உவந்து பெற்று      

      உலகுக்கு வழங்கிட்ட மைந்தன் யூசுப்

இன்னுயிரைப் பகை ஓநாய் உண்டதென்று     

      இயம்பிட்டப் பொய்யர்கள் சிரமே தாழ்ந்து

நின்றிடுவார் அவன்முன்னே, நேர்மை காத்து    

      நிலையான இறைவனுக்கு அஞ்சு வோரை

வென்றிடுவோர் இப்புவியில் எவரு மில்லை  

      விரைவிலிதைப் புரிந்திடலாம்!" என்றார் யாக்கூப்

 

"எரிக்கின்ற பெருந்தழலை உள்ளடக்கி             

      இருக்கின்ற எரிமலையும் வெடிக்கும் ஓர்நாள்,

திரிகின்றத் தென்றலிலும் அனல் பறக்கும்        

      சிரிக்கின்ற சிரிப்பெல்லாம் அழுகை யாகும்

சொரிகின்ற கண்ணீரைச் சுவைக்கும் நேரம்         

      தொலைவினிலே இல்லையெனும் உண்மை யாவும்

புரிகின்ற நாள்வரைக்கும் புன்யா மீனே             

      பொறுமையொடு காத்திருப்போம்!" என்றார் யாக்கூப்.

 

"பெற்றவரே மைந்தரின்பால் பிழைகள் சொன்னால்

      பிறிதெவரே போற்றிடுவர்?" என்றார் மைந்தர்;

"உற்றவரும் உறவினரும் இழைக்கும் குற்றம்     

      ஒப்புபவர் ஈருலகும் இழிந்தோ ராவர்,

கொற்றவரின் குறைகடிந்து கொதிக்கும் தீயின்      

      குழியினிலே வெந்திடவும் தன்னைத் தந்த

குற்றமற்ற இபுறாஹிம் நபியின் மைந்தர்            

      குலக்கொழுந்தாய் வந்தவன் நான்"என்றார் யாக்கூப்.

 

"கதிரவனும் முழுமதியும் விண்மீ னோடு               

      கனவினிற்றன் கழல்பணியக் கண்டான் யூசுப்,

அதைநமது கண்ணெதிரில் காணும் நேரம்          

      அருகில்வரக் காணுகிறேன், அதுவரைக்கும்

எதனையும்உன் மூத்தவர்க்கு இயம்பிடாமல்        

      இருந்திடுக!" என்றிட்டார் தந்தை யாக்கூப்

புதுமையினைக் கண்டதும்வாய் பொத்துவார்போல்    

      புன்யாமீன் பேச்சிழந்து வியந்து நின்றார்.

- - x - -