பக்கம் எண் :

263


ஒரு கொடியில் இரு மலர்கள்

இயல்-53

சூல்கொண்டு சோர்வு கொண்ட   

      சுலைகாவை நிமிர்த்தி வைத்துப்

பால்கொண்டு வந்த தோழிப்     

      பருகிடப் பணிந்து நின்றாள்  

வேல்பாய்ச்சும் விழியால் ‘ஏதும்    

      வேண்டாமே!’ என்ற வாறு

நூல்போன்ற இடைநெளிந்து      

      நுவலுக அமைச்சர்க் கென்றாள்.

 

மையிட்ட விழி சிவக்க           

      மலரிட்ட குழல் சிலிர்க்கக்

கையிட்ட வளை நொறுங்கக்       

      கதறிய சுலைகா, கர்ப்பப்

பையிட்டு வளர்த்த ஜீவன்        

      பசியினால் துடிக்கு தென்றாள்

நெய்யிட்டுப் பிசைந்த சோற்றை    

      நீட்டினாள் மூத்த தோழி!

 

மருத்துவக் கிழவி வந்தாள்         

      மற்றவர் ஒதுங்கி நின்றார்,

‘வருத்திடும் வலியைக் கொஞ்சம்     

      வாய்விட்டுக் கூவச் சொன்னாள்;

‘பொறுத்திடு கின்றேன், மற்றோர்       

      போகட்டும் அப்பால்!’ என்று

உறுத்திடும் வயிற்றைப் பற்றி         

      உடலினை வளைக்க லானாள்!