பீறிட்டு உதிரம் பொங்கப் பெரும்வலி வந்த தென்று வீறிட்ட சுலைகா கொள்ளும் வேதனை கண்டு மற்றோர் ஏறிட்டுப் பார்க்கும் போது எதிரினில் வந்த யூசுப் ‘நேர்ந்திட்ட தென்ன வென்று நிகழ்த்துவீர்!’ எனத் துடித்தார். "இறையருட் கொடையில் மிக்க ஏற்றமாய் அமையும் தாய்மை நிறைவினில் பெண்மை செய்யும் நீள்தவ மிதுதான், வேறு குறையெது மில்லை!" என்று கூறிய மூத்த தோழி ‘மறைவினில் சற்று நேரம் வரையிலும் இருப்பீர்!’ என்றாள், முந்நூறு நாட்க ளின்முன் மௌனமாய் பெற்ற இன்பம் கண்ணூறச் செய்யும் துன்பம் களைந்திட இறைவ னின்பால் எண்ணாத தெல்லாம் எண்ணி இறைஞ்சிய அமைச்சர் யூசுப் தன்னாசை மகவைக் காணத் தனிமையில் தவித்தி ருந்தார். அலைபடும் துரும்ப தாக ஆயிரங் கனவி னோடு நிலைபடா துலவும் யூசுப் நேரினில் வந்த தோழி "தலைகவிழ்த் திருப்ப தென்ன, தகைமிகு அமைச்சே, உங்கள் தலைவியார் இரட்டை மைந்தர் தந்தனள் மகிழ்வீர்!" என்றாள். |