ஒன்றினைப் பெறுதற் காக ஒரு கோடி ஆசை கொண்டு நின்றவள் இரண்டைப் பெற்று நெஞ்சினை நிறைத்த செய்தி நன்று நன் றென்ற வாறு நாயகி தன்னைக் காணச் சென்றனர் யூசுப், கண்டு சிறுநகை சுலைகா செய்தாள். வேதனை மிகுந்த போதும் வெளிறிய முகத்தி னோடு நாதனைக் கண்ட தேவி நாணத்தால் சிவந்து போனாள் "ஈதலில் எவர்க்கும் மேலாய் ஈந்திடும் இறைவன், நம்மின் மாதவம் ஏற்றான்!" என்று மகிழ்வொடு சொன்னார் யூசுப். ‘எழில்மிகு சுலைகா வுக்கு இருமகன் பிறந்தா’னென்று வழியெலாம் மொழிந்த வாறு வந்தவள் மன்ன ரின்பால் விழியெலாம் வியப்பு பொங்க ‘வேந்தரே, அமைச்சர் யூசுப் ‘எழில்பெறும் இரண்டு மைந்தர் ஈந்தனர்!’ என்று சொன்னாள். "புதுப்புனல் பாய்ச்சி மண்ணைப் பொன்விளை நிலமாய் மாற்றும் அதிசயம் செய்யும் ஆற்றல் அமைந்த நம் அமைச்சர் யூசுப் இதிலுமோர் அற்பு தத்தை இயற்றினா"ரென்ற மன்னர் பதியெலாம் இந்தச் செய்தி பரப்பிட ஆணை யிட்டார். |