பக்கம் எண் :

266


"நல்லறச் செங்கோ லேந்தி     

      நாட்டினைக் காக்கும் யூசுப்

இல்லறச் சோலை பூத்து            

      இருகனி காய்த்த"தென்று    

சொல்லியே பறைமு ழக்கித்        

      துள்ளியே சென்றார் வீரர்;

இல்லமே சூழ்ந்தார் மக்கள்        

      ஏந்தலும் அங்கே வந்தார்.

 

"என்னரும் மக்காள், நாட்டில்         

      ஏற்றமே பெற்ற யூசுப்    

பொன்னிகர் சுலைகா வோடு        

      பொருந்தியே வாழ்ந்த வாழ்வின்

சின்னமாய் பெற்ற மக்கட்           

      செல்வத்தைக் காண்பேன்" என்று

மன்னவர் கூறி விட்டு              

      மனையினுள் விரைந்து சென்றார்.

 

மஞ்சத்தின் இருபு றத்தே              

      மைந்தரைக் கிடத்தி வைத்துத்

துஞ்சுவாள் போல் சுலைகா           

      சோர்ந்திருக் கின்ற போது

‘அஞ்சுதல் வேண்டா’மென்று             

      ஆறுதல் சொன்னார் யூசுப்

‘கொஞ்சுதல் யாரை?’ என்று          

      கொற்றவர் கேட்டு வந்தார்.

 

‘ஏந்தலர் குரலைக் கேட்டு            

      எல்லோரும் ஒதுங்கி நிற்கப்

பூந்தளிர் சுலைகா வுக்குப்            

      பொன்மணி மாலை தந்து

‘சாந்தியே கொள்க!’ என்று           

      சாற்றிய மன்னர், தன்னைக்

காந்தமாய்க் கவரும் பிள்ளைக்       

      கனிகளை முத்த மிட்டார்.