பக்கம் எண் :

267


பொன்மணி மாலை பெற்றுப்    

      புன்னகை சுலைகா பூக்க

கண்மணி இருவர் கைக்கும்           

      கனகக்காப் பிட்ட மன்னர்    

"என்பணி அனைத்தும் ஏற்று            

      இயங்கிடும் இனிய நண்ப     

நின்பணி யாவும் வெற்றி            

      நிலைத்திட வாழ்வீர்!" என்றார்.

 

கொற்றவர் வாழ்த்தில் உள்ளங்       

      குழைந்திட்ட அமைச்சர் யூசுப்

"பெற்றவர் பிறந்தோர் என்றோ         

      பேணும்நல் லுறவோர் என்றோ

உற்றவர் எவரு மின்றி              

      உழைத்திடும் அடிமை வாழ்வைப்

பெற்றவன் உங்கள் அன்புப்         

      பேற்றினில் வளர்ந்தேன்!" என்றார்.

 

களிப்பினில் பொங்கும் யூசுப்        

      கண்ணீரைக் கண்ட மன்னர்    

களிப்பினால் உணர்வு பொங்கக்       

      கனிவொடு தழுவி, "பெற்ற   

கிளிகளுக் கேற்ற நாமம்              

      கூறுக!" என்று கேட்டார்;    

"அளித்திடல் வேண்டும் எங்கள்       

      அரசரே!" என்றார் யூசுப்.    

 

                    (வேறு)

 

"பெற்றவர்கள் விருப்பத்தை அறிந்திடாமல்

      பிரிதொருவர் பெயரிடுதல் பிழையே யாகும்;

மற்றவர்கள் விருப்பத்தை மதிப்ப தென்ற

      மரபினுக்கு இதுவல்ல!" என்றார் மன்னவர்

"பெற்றவர்கள் பெருவிருப்பம் மைந்தர்கட்கு

      பேரரசே பெயர்சூட்ட வேண்டும் என்று"

கொற்றவரைக் கூர்ந்திட்டார் யூசுப், நெஞ்சங்

      குளிர்ந்திட்ட சுலைகாவும் ஆமாம்!’ என்றாள்.