"ஒருகொடியின் இருமலராய் பூத்துப், பெற்றோர் உயர்குடியின் நறுமணத்தைப் பரப்ப வந்த இருவருக்கும் பெயரிடுதல் வேண்டும் என்றீர் இப்ராயீம்* மீஷா வென் றிருவ ருக்கும் திருநாமம் சூட்டிடுவோம்!" என்ற மன்னர் தேன்கலந்த பாலெடுத்து மைந்தர் நாவில் இருதுளிகள் தொட்டுவைத்தார், இருந்தோ ரெல்லாம் இப்ராயீம் - மீஷாவென் றழைக்க லானார். மைந்தருக்குப் பெயரிட்டு மாண்பு செய்த மன்னருக்கு விடைதந்த யூசுப், மெள்ளப் பந்தமொடு சுலைகாவின் பக்கம் சென்று பார்வையினால் தம்பெருமை சுட்டிக் காட்டி "எந்தனது தந்தையரும்* ஈஸினோடு இரட்டையராய் பிறந்தவர்தாம், அவ்வாறேயென் மைந்தர்களும் இரட்டையராய் வந்தார், இந்த மகிழ்ச்சியினை எந்தைபெறல் என்றோ?" என்றார். "என்னருமைத் தந்தையரும் இருந்தா ரென்றால் இருமைந்தர் நான்பெற்ற மகிழ்வி னுக்குத் தன்னருமை நாட்டினையே பரிசி லாகத் தந்திடுவார்!" எனச் சுலைகா சொல்லக் கேட்டு "உன்னருமை பெருமையினை உலகுமுற்றும் உவந்தேற்றும் பேற்றினையே இறைவன் தந்தான்; என்னருமை நாயகியே!" என்ற யூசுப் எழிலரசி சுலைகாவைத் துயில வைத்தார். - - x - - *யூசுப் சுலைகாவின் மைந்தர்களின் பெயர் இப்ராயீம் மீஷா என்றும் அப்ராயிம் மனாசே என்றும் சரித்திரக்காரர்களால் குறிப்பிடப்படுகிறது. *இஸ்ஹாக் நபி அவர்களுக்குப் பிறந்த இரட்டையரில் ஈஸு என்பவரோடுதான் யாக்கூப் நபியும் பிறந்தார்கள் என்பதை குறிக்கப்படுகிறது. |