பக்கம் எண் :

269


பதவியும் பரிசிலும் !

இயல்-54

பெற்றெடுத்த மைந்தர்களை எதிரில் வைத்துப்

      பெருந்தவத்தின் அரும்பயனை நெஞ்சில் வைத்துப்

பெற்றவரைப் பிறந்தவரை நினைவில் வைத்துப்            

      பேரழகி சுலைகாவை அருகில் வைத்து  

முற்றினிலும் இறையருளை நினைந்த யூசுப்                

      மோனத்தில் ஆழ்ந்திருக்கும் போதில், அங்கே

கொற்றவரின் வருகையினை ஒருத்தி சொன்னாள்           

      குறுநகையால் குரிசிலினைக் கூர்ந்தார் யூசுப்.

 

"கதிரவனும்    முழுமதியும்  தோன்றினாற்போல

      காணுகின்ற இப்ராயீம் மீஷா வுக்கு

நிதிமிகுந்த பெருவணிகர் பரிசில் கொண்டு

      நிற்கின்றார், பெறுதற்கு சுலைகாவோடு

அதிவிரைவில் சென்றிடுவோம்!" என்ற மன்னர்            

      அன்புமுகம் நோக்கிட்ட அமைச்சர் யூசுப்

"இதுவரையில் பரிசிலெதும் ஏற்கா என்னை

      இனிமேலும் ஏற்காமல் காப்பீர்!" என்றார்.

 

‘அன்புடையார் தரும்பரிசில் ஏற்ப தற்கு

      ஆகாதா?’ என்றரசர் வியந்து கேட்க

‘அன்புடையா ரன்பற்றா ரென்று யாரும்

      அமைச்சருக்கு இல்லை!’யெனச் சொன்னார் யூசுப்

‘பண்புடமை என்பதனால் முன்பு நானே

      பரிசளித்தேன் அதும்பிழையோ?’ என்றார் மன்னர்

‘என்றனிடம் பதிலுக்கு ஏதும் வேண்டார்

      ஈந்தக்கால் ஏற்றிடலாம்!’ என்றார் யூசுப்